ரஜினி நடித்துள்ள ‘ஜெயிலர்’ படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்ய ஆசைப்படுவோருக்கு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மேலும் உதயம் திரையரங்கில் மொத்தமாகவே டிக்கெட் விற்பனை மந்த நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். பான் இந்தியா முறையில் உருவாகும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படத்துக்கு அதிகாலை காட்சிகள் இருக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியிருந்தனர். ஆனால், அண்மையில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான அஜித்தின் ‘துணிவு’ படத்தின் அதிகாலைக்காட்சியில் ரசிகர் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு அனுமதி அளிக்கவில்லை. சிம்புவின் ‘பத்து தல’, ‘பொன்னியின் செல்வன்’, ‘மாவீரன்’ என எந்த படங்களுக்கும் அதிகாலைக் காட்சிகள் திரையிடப்படவில்லை. தமிழகத்தில் ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்குகிறது.
