இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ், சிவராஜ்குமார், பிரியங்கா அருள் மோகன் ஆகியோர் நடிக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று(ஜூன் 30) அப்படக்குழுவால் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ் கையில் வைத்திருக்கும் துப்பாக்கி ‘லீவிஸ் கன்’ எனப்படும் முதலாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட மிஷின் கன் வகையாகும். இதை வைத்து இந்தப் படம், முதலாம் உலகப் போருடன் சம்மந்தப்பட்டுள்ளதா என ரசிகர்கள் மத்தியில் கேள்விகள் எழுந்துள்ளன.
இந்தப் படம் தனுஷின் திரைவாழ்விலேயே மிகப் பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாகும். ஆகவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே ஒரு இண்டர்நேஷனல் தரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டிஷைன்களை ‘புஷ்பா’, ‘மாநாடு’ போன்ற படங்களுக்கு வடிவமைத்த தூனி ஜான் வடிவமைக்கிறார். 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் தனுஷ் காட்சியளிக்கவுள்ளார்.
