பேர்மிங்ஹாம், எஜ்பெஸ்டன் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஏஷஸ் மற்றும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடர்களின் முதலாவது போட்டியில் இங்கிலாந்தினால் நிர்ணயிக்கப்பட்ட 281 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் அவுஸ்திரேலியா 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்களை இழந்து 107 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இரண்டாவது இன்னிங்ஸில் 7 விக்கெட்கள் மீதமிருக்கு அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு மேலும் 174 ஓட்டங்கள் தேவைப்படுகிறது.
போட்டியின் கடைசி நாளான செவ்வாய்க்கிழமை (20) இரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படும் என கருதப்படுகிறது.
ஆரம்ப வீரர்களான டேவிட் வோர்னரும் உஸ்மான் கவாஜாவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 61 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.
ஆனால், டேவிட் வோர்னர், மார்னுஸ் லபுஸ்சான், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய மூவரும் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழக்க அவுஸ்திரேலியா தடுமாற்றத்திற்குள்ளானது.
எவ்வாறாயினும், உஸ்மான் கவாஜாவும் இராக்காப்பாளன் ஸ்கொட் போலண்ட்டும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி மேலும் விக்கெட்கள் சரிவதைத் தடுத்து 4ஆம் நாள் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
போட்டியின் 4ஆம் நாளான திங்கட்கிழமை (19) காலை தனது இரண்டாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 28 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த இங்கிலாந்து, மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் உதவியுடன் 273 ஓட்டங்களைப் பெற்றது.
ஜோ ரூட், ஹெரி ப்றூக், அணித் தலைவர் பென் ஸ்டோக்ஸ், ஒல்லி ரொபின்சன் ஆகிய நால்வர் 25 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
எண்ணிக்கை சுருக்கம்
இங்கிலாந்து 1ஆவது இன்: 393 – 8 விக். டிக்ளயார்ட் (ஜோ ரூட் 118 ஆ.இ., ஜொனி பெயாஸ்டோவ் 78, ஸக் க்ரோவ்லி 61, நெதன் லயன் 149 – 4 விக், ஜொஷ் ஹேஸ்ல்வூட் 61 – 2 விக்.)
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 386 (உஸ்மான் கவாஜா 141, அலெக்ஸ் கேரி 66, ட்ரவிஸ் ஹெட் 50, கெமரன் க்றீன் 38, பெட் கமின்ஸ் 38, ஒல்லி ரொபின்சன் 55 – 3 விக்., ஸ்டுவர்ட் ப்றோட் 68 – 3 விக்.)
இங்கிலாந்து 2ஆவது இன்: 273 (ஜோ ரூட் 46, ஹெரி ப்றூக 46, பென் ஸ்டோக்ஸ் 43, ஒல்லி ரொபின்சன் 27, பெட் கமின்ஸ் 63 – 4 விக்., நெதன் லயன் 80 – 4 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 281 ஓட்டங்கள்) 4ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 103 – 3 விக். (டேவிட் வோர்னர் 36, உஸ்மான் கவாஜா 34 ஆ.இ., ஸ்டுவர்ட் ப்றோட் 28 – 2 விக்.)

